வாசு. நன்றாக படிப்பான். வறுமையான குடும்ப சூழ்நிலையால் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் உள்ள பெரிய பூக்கடையில் மாலை முதல் இரவு வரை பூ கட்டுவான். நேற்றைய விடுப்பில் முதலாளி கோபமாக இருப்பதை உணர்ந்து கொண்டு, பவ்யமாக வணக்கம் வைத்துவிட்டு வேலையை தொடங்கினான். முதலாளி ஆரம்பித்தார்,
"வாசு! இனிமே பள்ளிக் கூடத்துக்குப் போறதுக்குப் பதிலா, கடைக்கே வந்திடு, வட்டியும் முதலுமா உங்கம்மாவோட கடன் ஏழாயிரத்துக்கு வந்திடுச்சி". நாலாவது படிக்கும் வாசுவுக்கு பகீரென்றது.
"முதலாளி, எவ்ளோ நேரம் வேணுமின்னாலும் பூ கட்றேன், ஆனா, பள்ளி கூடத்துக்குப் போகாதேன்னு மட்டும் சொல்லாதீங்க".
"முதல்ல ஒரு வாரம் தொடர்ந்து வா அப்புறம் பார்க்கலாம்", என்றபடியே மாலை நேர 'டீ' க்காக புறப்படலானார்.
நாலாவது நாள் மாலை. கையில் மைக், கூடவே ஒருவர் கையில் வீடியோ கேமராவுடன் வீதியில் நடந்த டி.வி பெண், வாசுவின் மல்லி கட்டும் அழகை வீடியோவை நோக்கி வர்ணிக்க ஆரம்பித்தாள்.
"நம்ம திடீர் சவால் நிகழ்ச்சிக்காக, முதலில் சந்திக்கப் போகும் நபர்"...அனைவரும் திறந்த வாயோடு பார்த்து கொண்டிருக்க, மைக் வாசுவை நோக்கி நீண்டது.."உங்க பேர்"
"வாசுங்க"...
"நீங்க, எங்க திடீர் கேள்விக்கு பதில் சொல்ல தயாரா?"
"தயார்", முடியை ஒதுக்கிக் கொண்டு தயாரானான்.
கையில் ஒரு பூப் பந்தை எடுத்தவள், "இந்தப் பந்திலே மொத்தம் எத்தனை மல்லி என்று சொல்ல முடியுமா? "
"உங்க பதில் 50 பூ கூடவோ குறையவோ இருக்கலாம்"
"ஆயிரத்து ஐந்நூற்று இருபது " என்றான் கூக்குரலாக,
முதலாளி திகைக்க, பத்திற்கும் குறைவான விநாடியில் விடை கூறிய வாசுவை அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்க்க..
"எப்படி இவ்ளோ சீக்கிரமா சொல்லிட்டீங்க"
"அது நான் கட்டின பூதாங்க...ஒரு முழத்துக்கு முப்பது ஜதை வைப்பேன்...கொசுறோட சேர்த்து, ஒரு முழத்துக்கு எழுபத்தியாறு பூ வரும்"..
"இதே கனகாம்பரம்னா....ஒரு முழத்துக்கு எண்பத்தியாறு பூ வரும்"..
எண்ணிக்கை நடந்து, வாசு சொன்னது சரியென்றது பூப்பந்து.
"இதோ உங்களுக்கான ஐயாயிரம் ரூபாய்"....வாசுவின் கையில் கொடுத்து விட்டு மறைந்தது கூட்டம்..
வாசுவின் கையில் இருந்த பணத்தை வாங்கிக் கொண்ட முதலாளி,
"வாசு, இனிமே தினமும் சாயங்காலம் கடைக்கு வந்திடு. ஒரு மணி நேரம் பூ கட்டு...அப்புறமா படி...இனிமே படிப்பு செலவ பத்தி கவலைப் படாதே...நீ எவ்ளோ படிக்கணும்னு நினைக்கறியோ அவ்ளோ படி"
வாசுவின் தலையை ஆதரவாக கோதினார் முதலாளி.
பின் குறிப்பு : விசயத்தை கேள்வி பட்ட வாசுவின் தந்தை, தண்ணியடிப்பதற்கு காசு தராதற்காக வாசுவிற்கு சூடு போட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
arputham , nee kallurinatkalil un kail vathiruntha navalhal ninaivuku varukurathu!
Post a Comment