Sunday, August 21, 2005

சிறுகதை : அப்பா ?...!

"பரணீ !! யூ ஆர் கிரேட்" என்று கட்டியணைத்த மனைவியை என்னால் விலக்க முடியவில்லை. சிறிது நேரம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தைக்கான சிறுநீர் சோதனை முடிவு பாஸிட்டிவ்வாக வரும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நல்ல செய்திதான். பெற்றோருக்கு தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். மற்ற அனைவருமே வாழ்த்துவார்கள். ஆனால், அமெரிக்கா வந்த முதல் மாத முடிவிலேயே இதை நான் எதிர்பார்க்க வில்லை. இருவருமே எம்.சி.ஏ. டிபண்டென்ட் விசாவில் வந்திருந்த காதல் மனைவிக்கு வேலைக்கான உத்தரவு (வொர்க் பர்மிட்) வாங்கி ஒரு வேலை வாங்கி விட்டால், பிறகு இரண்டு வருடங்களுக்கு பிறகு குழந்தைப் பற்றி யோசிக்கலாம் என்று நினைத்த எனக்கு சம்மட்டி அடி.

அலங்கரிக்கப் பட்ட அறை. ஆனால் சினிமாவில் வருவது போல் நிறைய பூவேலையெல்லாம் இல்லை. மணமக்கள் எங்கே இதை சாப்பிடப் போகிறார்கள் என்பது போல் தட்டு நிறைய இனிப்புகள், வெறுப்பு வருகிறார் போல....பக்கத்திலே பழங்கள், பால் இதையெல்லாம் விட கவிதா.
"கவிதா???"
"ம்..சொல்லுடா"
"இன்னும் ஒரு மாசத்துல அமெரிக்கா போயிடலாம். அங்க உனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும். கிடைக்கலைன்னாலும் இந்த வேலையை விட்டுடறதுல உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே?"
"என்னடா இப்படி கேட்கிற? பணமோ, வேலையோ உனக்கு முன்னால ஒரு தூசி. இதெல்லாம் முன்னாலேயே பேசினதுதானே. இப்ப என்ன திடீர்னு ", என்றபடியே அருகே வந்து தலையோடு முட்டினாள். கண்களில் தீ தெரிந்தது.

"குழந்தை பற்றி நான் சொன்னது நினைவிருக்கில்ல ", என்று கேள்வியோடு முடித்த என்னை ஏறிட்டாள்.

"நல்லாவே இருக்கு. நான் சொன்னதும் நினைவிருக்கில்ல", என்றபடியே கண் சிமிட்டினாள்.
என் பொறுமை போய்க் கொண்டிருந்தது.இரண்டு வருஷம் ஓ.கே. ஆனால் நடுவே நான் கர்ப்பமானால் கலைக்க மாட்டேன். எல்லாம் உன் பொறுப்பு என்று அவள் சொன்னதும், இண்டெர்நெட்டும், படித்த புத்தங்களும் கொடுத்த தைரியத்தில் ஓ.கே டீ குட்டி என்றபடியே அவளை இரண்டு மாதத்திற்கு முன் அணைத்தது நினைவிற்கு வந்தது.

அலுவலக விடுப்பு முடிந்து, ஏற்கனவே கவிதாவிற்கு பதிவு செய்திருந்த நேர்முகத் தேர்வையும் முடித்து அமெரிக்கா வரவே ஒன்னறை மாதமாகிவிட்டது. ஓரிரு நாள் கவனக் குறைவால் எனக்கு பதவி உயர்வு "அப்பா", சித்தி நாடகம் போல் எதிரொலித்தது.

மூளைக்குள் ஆயிரம் மின்னல்கள்.

அப்பா...எத்தனை முக்கியமான பொறுப்பு. எப்படி சொல்வதென்று தெரியவில்லை. என்னென்னமோ சிந்தனைகள். நான் அப்பா ஆவதற்கு தகுதியாகிவிட்டேனா? என் அப்பா எனக்கு தரவில்லை என்று நினைத்தையெல்லாம் என் பிள்ளைக்கு நான் கொடுக்க வேண்டாமா? ஒரு நல்ல அப்பாவாக, நண்பனாக, ஆசிரியனாக, சிறந்த தலைவனாக எப்படியெல்லாம் இருக்க வேண்டும் அந்தப் பிள்ளைக்கு. எங்கு சென்றாலும் இனி மூன்றாவது கண் வேண்டுமே அந்த ஜீவனைப் பார்த்துக் கொள்ள. இனிமேல் நான் தனி ஆள் அல்ல., என்னை நம்பி ஒரு உயிர். சம்பந்தமேயில்லாமல் நண்பர்கள், சொந்தக்காரர்களின் அப்பா ஆன வயதை கணக்கிடுகிறேன். மனதில் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க உடலின் எடை கூடிவிட்டதைப் போல் உணர்கிறேன். ச்..சீ..என்ன இது...ஒரு குழந்தைக்கு இத்தனை பயமா??? நம்மூரில் அனாயசமாக இரண்டு மூன்று குழந்தை பெற்றவர்கள் என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பதாகப் பட்டது. என்ன இருந்தாலும் எனக்கு அந்த தகுதி வரவில்லை என்பதில் உறுதியாயிருக்கிறேன்.

நான் குழம்புவதையும் இரண்டு நாட்களாய் நிம்மதியின்றி இருப்பதையும் கவனித்த கவிதா, காபி குடிக்கும் போது பொறுமையாகக் கேட்டாள்.
"இப்ப குழந்தை பெத்துக்கறதுல உனக்கு என்ன பிரச்சினை. நானே கவலைப்படல".
"அதில்லை. எனக்கு இந்த வயசில அந்தளவுக்கு மெச்சூரிட்டி இருக்கான்னு???"
"என்ன பெரிய மெச்சூரிட்டி. உங்கப்பாவுக்கு நீ பொறந்தப்போ என்ன வயசு"
"இருபத்தஞ்சு"
"உனக்கு இப்ப இருபத்தியேழு. குழந்தை பொறக்கறப்போ இன்னும் ஒண்ணு கூடியிருக்கும். அப்ப உங்கப்பா இப்படி நினைச்சிருந்தா, இப்போ நீ இங்க இருக்கமாட்ட, புரிஞ்சுக்கோ", என்றபடியே காபி கப்பை எடுத்துப் போனாள்.
"அப்ப அவரு என்ன நினைச்சாரோ. அப்ப காலம் வேற. இங்க சம்பாதிக்கவும்.. அனுபவிக்கவும் நிறைய இருக்கு", என்றேன் சற்றே வருத்தம் கலந்த ஆத்திரத்தில்.
"இதெல்லாம் பேசத்தெரியுது. ஆனா ஜாக்கிரதையா இருக்கத் தெரியல"
"ஓ.கே லீவிட்", என்றபடியே என் மடிக்கணியை தட்டினேன். சிந்தனைக் குதிரை கட்டுப்பாடில்லாமல் எங்கெங்கோ சென்றது.

என்ன செய்யலாம். கலைத்து விடலாம் தான். இங்கே அது மருத்துவ ரீதியாக பாதுகாப்பாகவே செய்துவிடலாம். ஆனால் கவிதா சம்மதிக்க மாட்டாள். அவளை கட்டாயப் படுத்தலாம். இப்போதுதான் முப்பத்தைந்து நாட்கள் ஆகியிருக்கிறது. அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. சுதந்திரம் பறிக்கப்பட போகிறது போல் உணர்கிறேன். இல்லை தேவையில்லாமல் குழம்புகிறேனா? தெரியவில்லை.

மாலை வீட்டிற்கு வந்த என்னிடம் கவிதா சொன்னதை கேட்ட எனக்கு சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை.
"பரணி கொஞ்சமா தீட்டு பட்டது!"
"நான் சொன்னேன்ல! எனக்குத் தெரியும்"பயமுறுத்தும் கருகலைப்பா இருக்குமோ....

எதுக்கும் அல்ட்ரா சவுண்ட் மூலம் மட்டுமே உறுதி படுத்த முடியும். எப்படியோ எதுக்கும் ஒரு செக்கப் செய்திடலாம் என்று மருத்துவரை சந்திக்க நேரமும் முன் பதிவு செய்தாயிற்று.

குழந்தை கலைந்திருக்குமோ....அல்லது வெறும் பயமுறுத்தலா....இதுக்குத்தான் கண்டதையும் படிக்கக கூடாது. என்ன இருந்தாலும், கவிதாவை சமாதானப் படுத்தி கலைத்து விடலாம். உறுதியாக முடிவெடுத்த மகிழ்ச்சியில் இருந்தேன். இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் குழந்தை..மறந்தும் இனி அசட்டையாக இருந்துவிடக் கூடாது.

மறுநாள். மதியம் மணி ஒன்னறை மணிக்கு அல்ட்ரா சவுண்ட் சோதனை. கவிதா சோதனைக்கு அழைக்கப்பட,
"நானும் உள்ளே வரலாமா?" என்று ஆங்கிலத்தில் கேட்க,
"கண்டிப்பாக நீங்களும்", என்றாள் சோதனை செய்யப் போகும் பெண் சிரித்தபடியே ஆங்கிலத்தில்.

சோதனை அறையின் உள் சென்றவுடன், கவிதாவின் ஆடையை களைந்துவிட்டு அவள் கொடுத்த காகித உடையை அணியச் சொன்னாள். ஆரம்பமாயிற்று சோதனை. திகில் கலந்த ஆர்வத்துடன் திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிந்தனைச் சிலந்தி வலையைப் பின்னி கொண்டிருந்த நேரத்தில் என்னைக் கலைத்தது அந்தக் குரல்.
"குழந்தை நன்றாக இருக்கிறது", என்ற சோதனைப் பெண்ணின் குரல்.

சிறு உருவம் ஒன்று துடித்துக் கொண்டிருப்பது திரையில் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க ஆர்வமும் ஆச்சர்யமும் சந்தோஷமும் திகிலும் கலந்த கலவையில் இருந்த என்னை அந்த டப்! டப்! டப்!! சத்தம் புரட்டிப் போட்டது. என் இதயம் வேகமாக துடித்தது. பரவசத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு. இதுவரை நான் அனுபவித்திராத பேரனுபவம்.

"குழந்தையின் இதயத்துடிப்பு 170 ஒரு நிமிடத்திற்கு...நன்றாக உள்ளது", என்றாள்.
கவிதாவின் முகத்தில் பெருமிதம் கலந்த சந்தோஷம்.
"வாழ்த்துக்கள்", என்றபடியே அடுத்த சோதனைக்குச் செல்ல தயாரானவளைக் கேட்டேன்.

இன்னொருமுறை இதயத்துடிப்பை கேட்க முடியுமா என்று.

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
இதயத் துடிப்பு கேளாதார்......புதுக் குறள் எழுதினேன்.


5 comments:

பரணீ said...

உங்கள் பதிவினை தமிழ்மணத்தில் சேர்க்கலாமே. ( குறைந்த பட்சம் மூன்று பதிவுகள் வேண்டும் )

http://www.thamizmanam.com/tamilblogs/bloggers.php

http://www.thamizmanam.com/tamilblogs/readers.php

சிவா.. said...

Bharani ,

Thank you for your comment. I am just started to write. I will

Sivasu

மிக்கி மௌஸ் said...

hi friend,(nanbare)
ur 'sirukathai' was super, simply reflects the vagrant male mind. by the by how u write in tamil. Can u give me a piece of advice pls ?. i'm new to blogspot.

thanx..
micky_mse@rediffmail.com

சிவா.. said...

Hi Micky,

Thanks for the visit and comment to my blog. I used Murasu Tamil font to write this story and sent to mugamoodi.blogspot for short story competition. Even I am struggling to post in Tamil.

Sivasu

Venkat said...

This is good.keep it up.