எப்படி தொடங்குவது
இழப்புடன் நான் இருக்கையில்
எப்படி தொடங்குவது....
முற்றத்திலே நீ இறந்து
சுற்றத்தை அழவைத்தாய்!
வர மறுத்த என் கண்ணீரை
வரவழைத்தாய்!!
கூட்டுக் குடும்பத்தின் குருவே
அமைதியின் திரு உருவே....
உன்னுள்
ஆன்மீகத்தை கண்டேன்
அமைதியைக் கண்டேன்
ஆத்திரத்தை கண்டேன்
அன்பைக் கண்டேன்....
உன்னிடம்
விருந்தோம்பலைக் கற்றேன்
மெளனத்தின் பலமறிந்தேன்
கண்களின் குறிப்பறிந்தேன்
சிலேடையின் சிலபல பொருள் பயின்றேன்
சந்தேகமேயில்லை
சகிப்புத்தன்மையின் சகோதரன் நீ!
கதைகள் போல் நிகழ்வுகள் பல -
உன் நினைவுகளை
படம் பிடித்துகாட்டியவன் நீ
சத்தமில்லாத குரு எனக்கு!
குற்றம் பல புரிந்தாய் நீயென
பலர்கூறக் கேட்டேன்
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லையென்றேன்....
கறைகள் சில இருந்தாலும்
களங்கமற்றவன் நீ
மண்ணிலிருந்து மறைந்தாலும்
என் நினைவலைகளில் நீர்க்க மாட்டாய்
நீக்கமற நிறைந்திருப்பாய்
என்னுள், என்றும் காற்று
என்னுள் உள்ள மட்டும்
அனலில் அடுப்பருகில்
வெந்த நீ
நெருப்பிலே நேரடியாகப் போகிறாய்..
நெருப்பிற்கு தெரியாதே
நீ அவனுக்கும் நண்பனென்று....
Monday, June 30, 2008
Subscribe to:
Posts (Atom)