Wednesday, September 27, 2006

சுற்றுலா : நயாகரா பயணம்

நான் சுற்றுலா கிளம்புவதே அரிது. காரணம், நேரம் மட்டுமல்ல, பணமும் தான். ஆனால் இந்த முறை நான் போக நினைத்தது, நயாகரா. சிறுவயதில் பாடநூல்களில் படித்தபோதே பார்க்க வேண்டும் என்று ஆவல் பிறந்த இடம். எதையும் முடிவெடுக்க நெடுநேரம் எடுத்துக் கொள்ளும் நான், இந்த முறை சீக்கிரமாகவே முடிவெடுத்தேன், நயாகரா செல்ல. காரணம், ஆவல் மட்டுமல்ல சீசன் முடிந்து விடுமென்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும். அமெரிக்காவில் வேலை பார்த்தால், நேர்முகத் தேர்வு வினாக்களுக்கு பதிலலிப்பதை விட, "Weekend Plan"-க்கு பதிலலிப்பது முக்கியம். கார் வேறு இல்லாவிட்டால் அவ்வளவுதான். அமெரிக்கர்களைவிட நம் ஆட்கள் கேட்பது அதிகம். வந்த புதிதில் இருக்கும் டாலர் கணக்குகள் போகப்போக மறைந்து, நாமும் ஒரு இருநூறு, முந்நூறு சுற்றுலாவிற்காக செலவிடலாம் என்று எண்ணினால் இந்த மாதிரி சுற்றுலா செல்லலாம். இங்கே எல்லாவற்றிற்கும் டீல் கிடைக்கும். நிறைய வெப் தளங்களை சோதனையிட்டதில், இருப்பதிலேயே சுமாரன டீலான நார்த்-வெஸ்ட் ஏர்லைன்ஸில் டிக்கட்டுகளை புக் செய்தேன். கனவுப் பயணத்திற்கான தேதி ஜுலை 22. தங்குவதற்கான விடுதி ஒன்றையும் புக் செய்துவிட்டு, எல்லாவற்றையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டேன். ஆயிரம் இருந்தாலும் நம்மூர் கட்டுசாதம் மாதிரி ஆகுமா? வழக்கம் போல் இட்லி (மிளகாய் பொடிதடவி தான்), சப்பாத்தி மற்றும் பழங்களோடு கிளம்பினோம். போகும் போது, டெட்ராய்ட்டில் இறங்கி, பிறகு வெறொரு விமானம் மாற வேண்டும் (இன்னும் காசு கம்மியாக கொடுத்தால், நாலைந்து இடங்களுக்கும் கூட்டிச் செல்வார்கள், ஊருக்கு வரும்போது பீலா விட்டுக் கொள்ளலாம். என்ன இரண்டு மணி நேரத்தில் போக வேண்டிய தூரத்திற்கு எட்டு மணி நேரம் ஆகும்). காலை ஆறுமணிக்கே கிளம்பியதால், எட்டேகாலுக்கு டெட்ராய்ட்டில் இறங்கியதும் பசி வயிற்றைக் கிள்ளியது. கொண்டு சென்றிருந்த இட்டிலிகளை கபளீகரம் செய்ததும், விமான நிலையத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினேன். மொத்தம் எழுபத்தியாறு கேட்டுகளுக்கு (Gate)மேல், எல்லாமே நார்த்-வெஸ்ட்க்கு சொந்தமானது போலும். நடைபாதை எஸ்கலேட்டர் மற்றும் மேல் தள மொபைல் ட்ரைன் உதவியுடன் எளிதாக இந்த கோடியில் இருந்து அந்த கோடிக்கு செல்ல முடியும். இது தவிர முதியவர்களுக்கு தேவையானதை எடுத்துச் செல்ல தனி வண்டி. வாழ்க்கை வாழ்வதற்கே என்று நாம் கோல்கேட் பற்பசையால் பல் துலக்க மட்டுமே பாடுகிறோம் (இப்போது அந்த விளம்பரமும் வருவதில்லை என நினைக்கிறேன்). இங்கு எல்லாவற்றிற்கும் சொகுசு. ம்...சரி...விடுங்கள் எல்லாம் விஜயகாந்த் பிரதமரானல் சரியாகிவிடும். டெட்ராய்ட்டிலிருந்து சரியான நேரத்திற்கு கிளம்பி, பஃபல்லோ (Buffalo) பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கினோம். நயாகரா அருவிக்கருகிலேயே ஹோட்டல் இருந்ததால், கால் டாக்ஸி செலவு ஒருமுறைதான். நாமும் நினைத்த போதெல்லாம் அருவியைப் பார்க்கலாம். இருந்தாலும் நான் பேருந்தில் பயணப்பட ஆசைப்பட்டேன். ஒரு அமெரிக்க பஸ் டிரைவர் மிகத் தெளிவாக பஸ் பாதையை விளக்கினார். விமான நிலையத்திலிருந்து, நயாகரா நீர்வீழ்ச்சிக்கு நேரடி பஸ் கிடையாது. முதலில் ஒரு டவுன்-டவுன் (Downtown) பஸ்ஸை பிடித்தோம். நயாகராக என்பது ஒரு செத்துக் கொண்டிருக்கும் நகரம் (Dying City) என்பதை வழியில் கண்ட வீடுகளும், ஹோட்டல்களும் உணர்த்தின. பழைய பேய் படத்தில் (ஆங்கில) வருவதுபோல்தான் எல்லாமே. கருப்பர்கள்தான் பெரும்பாலும் வசிக்கிறார்கள். போதைப் பொருள் விற்பதுதான் அவர்கள் முக்கிய தொழிலாம் (நயாகராவிலிருந்து வரும்போது ஒரு இந்திய கார் ஓட்டுனர் சொல்லக் கேட்டது). டவுன்-டவுனில் இறங்கும் போது, பஸ் டிரைவர் ஒருவரிடம் எங்களுக்கு உதவுமாறு கூறினார். என்னையும் என் மனைவியையும் பார்த்த மாத்திரத்திலேயே கேட்டார், "Are you Comming from India?". இந்தியாவைப் பற்றி நிறைய படித்திருப்பதாகவும், வந்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார். முகம் தெரியாத ஊரில் நம் ஊரைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ பெருமையாக பேசக் கேட்பது மிகவும் சந்தோஷத்தை அளிக்கக் கூடியது என்பதை நான் மீண்டும் உணர்ந்தேன். நம் ஊரைப் போல எளிமையாக ஒரு விலாசத்தை அமெரிக்காவில் கண்டுபிடிக்க முடியாது. மதியம் மணி மூன்று. கடைசியில் ஒரு கடையில் கேட்டபோது, நாங்கள் இறங்கிய இடத்திற்கு அருகிலேயே இருந்தது, நான் புக் செய்திருந்த ஹோட்டல். ஒரு வழியாக ஹோட்டலை அடைந்து, புக் செய்த இண்டர்நெட் செய்தியை சொன்னதும், இரண்டாவது தளத்தில் ஒரு ரூம் கிடைத்தது. மிகவும் பழமையான ஹோட்டல், புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் சீக்கிரம் எழுந்ததால் ஒருவித சோர்வு இருந்தது. கொண்டு சென்றிருந்த சப்பாத்தியை சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போட்டோ ம். வெள்ளிக் கிழமை இரவு பத்து மணிக்கு வாணவேடிக்கை நடக்கும் (கனடா பக்கம்) என்பதால், அதைப் பார்க்கும் பொருட்டாக எட்டு மணி போல் கிளம்பினோம். இங்கும் பழமையான வீடுகள் மற்றும் காடு. அதைத்தாண்டினால் அடுத்த வீதியைத் தொட்டுக் கொண்டு ஓடுகிறது, விஸ்வரூப நயாகரா ஆறு. மெலிதானா ஆற்றின் ஓசையும், குளிரூட்டும் காற்றும்...அப்படியே அமெரிக்கன் அருவிக்கு வந்தோம். இவ்வளவு நேரம் மெலிதான சத்தத்துடன் நாம் பார்த்த ஆறா இப்படி ஓசையுடன் விழுகிறது, என்று நினைத்தாலே உள்ளுக்குள் பயம் பயணப்படுகிறது. அருவியை இரவிலே பார்க்க ஏதுவாக வண்ண விளக்கு ஒளியை பாய்ச்சுகிறார்கள், கனடா பக்கமிருந்து. தண்ணீர்தான் கொட்டுகிறது என்றாலும் பார்க்க பார்க்க அலுப்பே தட்டவில்லை. சென்னையின் தண்ணீர் பஞ்சமும், ஒரு கேன் இருபது ரூபாய் கொடுத்தது வாங்கியதும் ஞாபகத்திற்கு வராமலில்லை. ஓயாது கொட்டும் அருவியில் மனதிருந்தாலும், இது போன்ற ஒரு அருவி நம் ஊரில் இருந்தால் எவ்வளவு காகிதமும், தமிழர்களின் நேரமும் மிச்சப்படும் என்றும் என் மனம் கணக்குப் போடமலில்லை (மு.க, ஜெ தற்போது ராமதாசுவும் காவிரி பற்றி வருடத்திற்கு இருமுறை அறிக்கை விட வேண்டாமே. நாமு வேலை கெட்டு அதை படிக்க வேண்டாமே). அந்த இரவில் நயாகராவைச் சுற்றி நிறைய காதல் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது. தேனிலவிற்கு சிறந்த இடமாக இதை ஏன் விளம்பரம் செய்கிறார்கள் என்று, இங்கு வந்து பார்த்தால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். குதிரைச் செருப்பு (Horse Shoe) அருவியிலிருந்து அடிக்கும் சாரல், தூவானம் போலவும், சுற்றி அடிக்கும் காற்றும் இத்தனை சுற்றுலா பயணிகள் இருந்தும் அந்த இடத்திலிருக்கும் அமைதியை கிழிப்பது போல் கத்தும் பறவைகளும் மனதை கொள்ளை கொண்டது.இதைத் தவிர வந்திருந்த சுற்றுலா கூட்டத்தில் முக்கால்வாசி நபர்கள், நம் நல்லுலகத்தை சேர்ந்த தமிழர்கள். இரவு வாண வேடிக்கையையும், அமெரிக்கன் அருவியையும் பார்த்த ஆச்சர்யம் மீளாமல் மிச்சமிருக்கும் நயாகரா அருவியை நாளை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஹோட்டலை நோக்கி நடையைக் கட்டினோம்.